Tuesday, July 3, 2007

மலைகள்

இயற்கை கல் மேடு மலை. மேனியே பாறையாய் ஓங்கி வளர்ந்த மாளிகை. நம்மை மேல் நோக்க வைத்து மேலிருந்து பார்க்கும் அது. தலை தட்டும் மேகங்கள். வான் முட்டும் மரங்கள். குருதி போல் அருவி ஒழுகும் ஓடைகள். இயற்கை வடித்த சிலை இம்மி அளவும் நகருவதில்லை. தவமுனிகளை தன்னகத்தே இழுக்கும். மழை வர உழைக்கும். சுரண்டாமல் இருந்தால் பிழைக்கும். பறவை, விலங்கை அழைக்கும். இயற்கையில் அடையாளமாக அது நிலைக்கும். சிகரம் என்ற உயரம். அதுவே இயற்கை அன்னையின் உயிரும். மர மயிர் படர்ந்த மலைகள் செழுமை சேர்க்கும் நம் கண்களுக்கு. ஒரு மலையின் வேர் அந்த மண்ணுக்குதான் தெரியும். ஒவ்வொரு மலைக்கும் மக்கள் ஒரு கதை வைத்திருப்பார்கள். பெரும்மலை அருகே சிறு ஊர் இருந்தால் மரம் போல் நிழல் தருவது அந்த மலைதான். குடைக்கு விடை கிடைத்தது கண்ணனுக்கு ஒரு மலைவடிவில். கடவுள் பலரும் கால் நோகாமல் மலை உச்சியில் போய் உட்கார்ந்ததால் பல மலை பிழைத்தது கல்வெட்டிகளிடமிருந்து. இன்னும் பல நினைவுச் சின்னங்களாக மின்னுகின்றன. மலைகளின் பாறைகள் இயற்கை செதுக்கிய சிற்பங்கள். காற்று, மழை, வெய்யில் அதை செதுக்கும் சிற்பிகள். கடுங்குளிர், கொடும் பனி, சுட்டெரிக்கும் வெய்யில் என எதையும் தாங்கும் இதயங்களை பிரதிபலிக்கின்றன. எல்லா மலைகளுக்கு அடியிலும் என்ன புதையல் வைத்தான் இறைவன் என்று தள்ளி பார்க்க யார்க்கும் திரணி இல்லை. துணிவும் இல்லை. மலையின் பிரம்மாண்டம் பிரம்மிப்பூட்டும் பார்த்தவரை. இயற்கை மலைக்கு இணையாக யாரும் செயற்கை கற்குவியல் செய்ததில்லை. அப்படியே செய்தாலும் இயற்கையின் நிலையில் இல்லை. மலயேற்றமே அலாதியான விளையாட்டு. அதனோடு ஒட்டி, உரசி, பழகி, உச்சி சென்று, உலகை பார்ப்பது பலருக்கும் வியப்பான் ஆனந்தம். மலையின் மீது ஏறுவதால் சிறந்த எண்ணங்கள் உருவாகும். அதுவே பல படைப்பாளிகளை உருவாக்கும். முகிலினங்கள் மலைகளில் முட்டி வலிதாங்காமல் இடி ஓசை எழுப்பி சிந்தும் கண்ணீர்தான் மழை தூரல்களா? மலை உச்சி சென்று நின்று பார்த்தால் பெரிய பரந்து விரிந்த ஊர் சிதறிய கண்ணாடி சில்லுகளாய் பகலவன் ஒளியில் மின்னும் மனித நடமாட்டமும் அவர்கள் வாகனமும் சிறு, பெரு எறும்புகளாய் ஊர்ந்து செல்லும் அழகே அலாதியானது. மலை உச்சியில் அடிக்கும் பலமான காற்றுதான் மலையைக் கரைக்கிறதா? என்ற கேள்வி எழும். இத்தனை தடையையும் மீறி எப்படி மலை வளர்ந்தது என்பது ஆச்சிரியமான அதிசயம். அதை பார்த்தால் வாழ்வின் ருசியும் வாழவேண்டும் என்ற பசியும் அதிகரிக்கிறது. மலையை போல பெரிய மனமும், குணமும், எண்ணமும் நம்மிடமிருந்தால் வாழ்வில் வெற்றி தின்னம். அவ்வாறே நமக்கு கிட்ட இறைவன் அருள் புரியட்டும்.

No comments:


Free Blog Content