Thursday, July 5, 2007

கோபம்..

வாழ்கைக்கு தேவையான ஒன்று கோபம்.! மதங்களும் வேதங்களும் போதனை செய்யும் கோபத்தை அடக்கச் சொல்லி. ஆனால் எதையும் அடக்கி அழிக்க முடியாது. தீ சுடும் என்பதால் தள்ளி வைத்து விட்டோமா? மிளகாய் காரம் என்பதால் சமைக்காமல் இருக்கிறோமா? இரவு இருட்டை அழிக்க தீ தீபமாக ஒளிர்கிறது. கோபத்தீயும் அது போலத்தான். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும். இது முன்னோர் வாக்கு.
அறியாமையை கோபம் கொள்வோம். அறிவு வளரும்.
வறுமையை கோபம் கொள்வோம். வளம் பெறுகும்.
அஞ்ஞானத்தை கோபம் கொள்வோம். மெய்ஞானம் பிறக்கும்.
காரிருள் கொண்ட இரவின் கோபம் விடியலை நோக்கி.
கோபத்தை குறைத்து நல்ல கொள்கையை உயர்த்துவோம். சில கோபங்கள் நம்மை வாழ்கையின் கோபுரத்திற்கு இட்டுச் செல்லும். சில கோபங்கள் கோபுரத்தில் உள்ளவரை தெருக் கோடியில் விட்டு விடும். அளவான அறிவுள்ள கோபமே ஆரோக்கியம். கோபத்தில் சிலர் கொட்டும் வார்த்தைகளை அள்ளத் தேவையில்லை.
அவை மனதிலிருந்து வரும் வார்த்தைகளே அல்ல. சில நேரம் சிலரை அக்கோபம் தீயைப் போல் சுட்டெரிக்கும், அவற்றை தீண்டாமல் விடுவதே நல்லது. தாங்கள் நினைத்ததை அடைய முடியாமல் தோற்று, அதனால் மனக் கொந்தளிப்படைந்து அதை வெளிப்படுத்தும் செயல்தான் கோபம். சில சந்தர்பங்களே கோபத்திற்கு காரணமாகிறது. சந்தர்பத்தை நாம்தான் ஏற்படுத்துகிறோம், பிறகு மற்றவரை காரணம் காட்டி நாம் தப்பிக்க முயல்கிறோம். கோபம் மேலோங்கும் போது அறிவு, ஆன்மா, அகம் கைகட்டி வாய் பொத்தி செயல்ற்று நின்று வேடிக்கை பார்க்கும். கோபம் என்னும் தீ ஊற்றை அமைதி என்னும் நீர் அணையால் கட்டுபடுத்தி தீபமாக எரியச் செய்ய வேண்டும். இறைவன் சன்னிதியில் கோபத்தை தீயிலிட்டு, அவன் அடி பணிந்து அனைவரும் அவன் அருள் பார்வை பட்டு அமைதி காண்போம். நம் வாழ்வை வளமாக நலமாக வாழக்கற்று கொள்வோம்.

No comments:


Free Blog Content