Thursday, July 5, 2007

பணம்..

' அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை 'வள்ளுவர் வாக்கு. எக்காலத்திற்கும் இந்த வாக்கு பொருந்தும். பணத்தால் ஒன்று சேர்வதும் பிளவு படுவதும் இன்றைய வாழ்கையின் ஒரு செய்தி ஆகிவிட்டது. வங்கி கணக்கில கணக்கு ஏறுவதையே யாவரும் விரும்புகிறார்கள். பணம் இருப்பவரை பார்த்தால் பல் இளிப்பது இல்லாதவரைப் பார்த்தால் முகம் சுளிப்பதும் பல இடங்களில், விழாக்களில், இல்லங்களில், நடக்கும் வேடிக்கை.! கலிக்கு இடம் கொடுத்த பரீஷ்த் மன்னன் மதியின்றி சம்மதம் சொல்லி மாண்டு போனான். ' காசில்லாதவன் கணவனே ஆனாலும் கதவை சாத்தடி' என்பது இன்று பல வீடுகளில் நடமுறைக்கு உள்ளது. பணம் பலரையும் ஆட்டி வைக்கிறது. பணம் உள்ளவனிடம் பகைமை வளர்ப்பது நல்லதல்ல என்பது இன்று அனைவரும் பின்பற்றும் வேதம். பணம் பாசத்தை மறைக்கும், அன்பை அழிக்கும், அறிவை குலைக்கும், உறவை அறுக்கும், உயர்ந்தோரை தாழ்த்தும். அந்த பணமே சில அல்ல பல சமயங்களில் பாசத்தை உருவாக்கும், அன்பை வளர்க்கும், உறவை புதுப்பிக்கும், உணர்ந்தோரை உயர்த்தும், இல்லாரை உயர்த்தும், பாவத்தை மறைக்கும், பணம் உள்ளவனே பலவான் என்ற மாயத்தோற்றத்தில் பலரும் மயங்கி உள்ளார்கள்.
வாழ்கை வாழ பணம் என்பது போய் பணம் பண்ண வாழ்கை வாழ்பவர்கள் ஏராளம். இதில் நான் என்ன? நீ என்ன? இன்னாளில் துறவிக்கும் பணத்திடம் உறவு உண்டு. இல்லாவிடில் அவனுக்கும் கூட்டம் வருவதில்லை. உறக்கம் கெட்டு, உடலும் கெட்டு, பழக்கம் கெட்டு, ஒழுக்கம் அற்று பணத்தை மட்டுமே குறியாக பதுக்கும் பாவிகள் பல்கி பெருகி கொண்டு இருக்கிறார்கள். பணத்தை நம் கட்டுப்பட்டிற்குள் வைத்துக்கொண்டால் அகிலமும் நம் கையில்தான். தாமரை இலை தண்ணீராய் இருந்தால் நாம் எந்த பணச் சுழலில் அகப்படாமல் தப்பலாம். நாம் சுவாசிக்கும் காற்றுக்கு அடுத்தபடியாக மக்கள் முக்கியமாக கருதுவது பணமே. பணம் இல்லாதவன் வாழ்கையின் சுகம் அறியான். பணமே வாழ்வின் ஆதாரம். பணத்தின் மதிப்பறிந்தால் பணம் உன்னை அறியும் பணத்தை தர்மம் செய்தால் பாவம் கரையும் என்று பலரும் நம்புகிறார்கள். பணம் பண்ண எந்த வரையரையும் இல்லை. அதற்கு வானமே எல்லை. போதும் என எவரும் சொல்ல துணிவதில்லை. அடுத்தவர் நம்மை விட அதிகமாக வைத்திருந்தால் அதையே ஊக்கமாகக் கொண்டு அதைவிட அதிகமாக பணம் ஈட்ட முனைவோம். வயிற்றுக்கும், வாழ்கைக்கும் அளவு வைத்த இறைவன் ஆசைக்கும் மட்டும் அளவு வைக்க மறந்தான். வாழ்வின் பெரும் பகுதி பொருள் சேர்க்கும் வேலையிலே உள்ளோம். பணத்தை அதிகம் சேமித்து, அளவோடு செலவு செய்து, வாழ்வில் இன்பம் காண இறைவன் அருள்புரிவானாக.

No comments:


Free Blog Content