Saturday, June 23, 2007

மோகம்..

அளவறியா ஆசை பேராசை. பெண்ணைப் பார்த்தே இந்த வார்த்தை மோகத்தை உருவாக்கி இருக்கலாம். மோகம் என்பது பெண்ணைப் பார்த்து மட்டும் வருவது அன்று பொருளை பார்த்து கூட நமக்கு வருகிறது. பெரும்பாலும் காமத்திற்கும் மோகத்திற்கும் அதிகம் நாம் முடிச்சு போடுகிறொம். வீரத்தின் மீது மோகம் கொள்வர் வீரர்கள். விளையாட்டின் மீது மோகம் கொள்வர் சிறார்கள். காதல் மீது மோகம் கொள்வர் காதலர்கள். கவிதை மீது மோகம் கொள்வர் கவிஞர்கள். எழுத்தின் மீது மோகம் கொள்வர் இசைப் பிரியர்கள். பாடல் மீது மோகம் கொள்வர் பாடலர்கள். வணிகம் மீது மோகம் கொள்வர் வணிகர்கள். இறைவன் மீது மோகம் கொள்வர் பக்தர்கள்.
மோகத்தில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் மோகத்தை முகர்ந்தவர்கள். மோகத்தின் வேகம் அறிந்து விவேகமுடன் முகம்பாராமல் இருப்பவர்கள் ஞானிகள். ஆனால் ஞானிகளுக்கும் பற்றற்ற நிலை மீது மோகம் உண்டு. மோகமில்லா வாழ்வு இந்த புவியில் வாழ்வது அரிது. தாமரை இலை தண்ணீர் போல மோகத்தை நம் உள்ளத்தில் உறைய விட்டால் உலகம் நம் கையில். வாழ்கை நம் கையில். காதல் கொண்டோர் மோகம் கொண்டால் அதற்கு அன்பு என பெயரிட்டு ஆராதனை செய்வர். அவர்கள் காதலில் காமமும் கலந்தால் மோகத்தின் சுவை கூடும். மோகத்தின் தாகம் ஆசையின் வேகம் அதுவே அழிவின் ஆரம்பம். மோகம் ஓர் குறுவாளைப் போன்றது பழத்தையும் நறுக்கலாம் பலரையும் சிதைக்கலாம்.
அதை கையாள்வதே ஒரு கலை. நாம் மோகத்தின் வசமாகாமல் மோகம் நம் வசமானால் வாழ்வில் வசந்தமே. சிறுவர்களுக்கு கல்வியின் மீது மோகமூட்டுவோம், இளையவர்களுக்கு வாழ்வின் மீது மோகமூட்டுவோம், தம்பதியருக்கு குடும்பத்தின் மீது மோகமூட்டுவோம், நலிந்தவருக்கு நம்பிகையின் மீது மோகமூட்டுவோம், வறியவருக்கு செழுமை மீது மோகமூட்டுவோம், உல்லாசிகளுக்கு உழைப்பின் மீது மோகமூட்டுவோம், பெரியவர்களுக்கு வாழ்வின் பசுமயான நினைவுகளின் மீது மோகமூட்டுவோம், அரசியல்வாதிகளுக்கு நல்ல தர்மசிந்தனை மீது மோகமூட்டுவோம், சன்யாசிகளுக்கு இறையருள் மீது மோகமூட்டுவோம். நல்ல நினைவுகளில் நான்கு பக்கமும் மோகத்தீ பரவட்டும். அத்தீக்கு மன நிறைவென்னும் எல்லை வகுப்போம். வாழ்வை வளமாக்குவோம். வாழ்வின் மோகம் வாழ்கையின் யோகம். நம் வாழ்வை நலமாக, வளமாக வாழ்ந்து காட்டுவோம்.

No comments:


Free Blog Content