Thursday, July 5, 2007

கோபம்..

வாழ்கைக்கு தேவையான ஒன்று கோபம்.! மதங்களும் வேதங்களும் போதனை செய்யும் கோபத்தை அடக்கச் சொல்லி. ஆனால் எதையும் அடக்கி அழிக்க முடியாது. தீ சுடும் என்பதால் தள்ளி வைத்து விட்டோமா? மிளகாய் காரம் என்பதால் சமைக்காமல் இருக்கிறோமா? இரவு இருட்டை அழிக்க தீ தீபமாக ஒளிர்கிறது. கோபத்தீயும் அது போலத்தான். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும். இது முன்னோர் வாக்கு.
அறியாமையை கோபம் கொள்வோம். அறிவு வளரும்.
வறுமையை கோபம் கொள்வோம். வளம் பெறுகும்.
அஞ்ஞானத்தை கோபம் கொள்வோம். மெய்ஞானம் பிறக்கும்.
காரிருள் கொண்ட இரவின் கோபம் விடியலை நோக்கி.
கோபத்தை குறைத்து நல்ல கொள்கையை உயர்த்துவோம். சில கோபங்கள் நம்மை வாழ்கையின் கோபுரத்திற்கு இட்டுச் செல்லும். சில கோபங்கள் கோபுரத்தில் உள்ளவரை தெருக் கோடியில் விட்டு விடும். அளவான அறிவுள்ள கோபமே ஆரோக்கியம். கோபத்தில் சிலர் கொட்டும் வார்த்தைகளை அள்ளத் தேவையில்லை.
அவை மனதிலிருந்து வரும் வார்த்தைகளே அல்ல. சில நேரம் சிலரை அக்கோபம் தீயைப் போல் சுட்டெரிக்கும், அவற்றை தீண்டாமல் விடுவதே நல்லது. தாங்கள் நினைத்ததை அடைய முடியாமல் தோற்று, அதனால் மனக் கொந்தளிப்படைந்து அதை வெளிப்படுத்தும் செயல்தான் கோபம். சில சந்தர்பங்களே கோபத்திற்கு காரணமாகிறது. சந்தர்பத்தை நாம்தான் ஏற்படுத்துகிறோம், பிறகு மற்றவரை காரணம் காட்டி நாம் தப்பிக்க முயல்கிறோம். கோபம் மேலோங்கும் போது அறிவு, ஆன்மா, அகம் கைகட்டி வாய் பொத்தி செயல்ற்று நின்று வேடிக்கை பார்க்கும். கோபம் என்னும் தீ ஊற்றை அமைதி என்னும் நீர் அணையால் கட்டுபடுத்தி தீபமாக எரியச் செய்ய வேண்டும். இறைவன் சன்னிதியில் கோபத்தை தீயிலிட்டு, அவன் அடி பணிந்து அனைவரும் அவன் அருள் பார்வை பட்டு அமைதி காண்போம். நம் வாழ்வை வளமாக நலமாக வாழக்கற்று கொள்வோம்.

பணம்..

' அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை 'வள்ளுவர் வாக்கு. எக்காலத்திற்கும் இந்த வாக்கு பொருந்தும். பணத்தால் ஒன்று சேர்வதும் பிளவு படுவதும் இன்றைய வாழ்கையின் ஒரு செய்தி ஆகிவிட்டது. வங்கி கணக்கில கணக்கு ஏறுவதையே யாவரும் விரும்புகிறார்கள். பணம் இருப்பவரை பார்த்தால் பல் இளிப்பது இல்லாதவரைப் பார்த்தால் முகம் சுளிப்பதும் பல இடங்களில், விழாக்களில், இல்லங்களில், நடக்கும் வேடிக்கை.! கலிக்கு இடம் கொடுத்த பரீஷ்த் மன்னன் மதியின்றி சம்மதம் சொல்லி மாண்டு போனான். ' காசில்லாதவன் கணவனே ஆனாலும் கதவை சாத்தடி' என்பது இன்று பல வீடுகளில் நடமுறைக்கு உள்ளது. பணம் பலரையும் ஆட்டி வைக்கிறது. பணம் உள்ளவனிடம் பகைமை வளர்ப்பது நல்லதல்ல என்பது இன்று அனைவரும் பின்பற்றும் வேதம். பணம் பாசத்தை மறைக்கும், அன்பை அழிக்கும், அறிவை குலைக்கும், உறவை அறுக்கும், உயர்ந்தோரை தாழ்த்தும். அந்த பணமே சில அல்ல பல சமயங்களில் பாசத்தை உருவாக்கும், அன்பை வளர்க்கும், உறவை புதுப்பிக்கும், உணர்ந்தோரை உயர்த்தும், இல்லாரை உயர்த்தும், பாவத்தை மறைக்கும், பணம் உள்ளவனே பலவான் என்ற மாயத்தோற்றத்தில் பலரும் மயங்கி உள்ளார்கள்.
வாழ்கை வாழ பணம் என்பது போய் பணம் பண்ண வாழ்கை வாழ்பவர்கள் ஏராளம். இதில் நான் என்ன? நீ என்ன? இன்னாளில் துறவிக்கும் பணத்திடம் உறவு உண்டு. இல்லாவிடில் அவனுக்கும் கூட்டம் வருவதில்லை. உறக்கம் கெட்டு, உடலும் கெட்டு, பழக்கம் கெட்டு, ஒழுக்கம் அற்று பணத்தை மட்டுமே குறியாக பதுக்கும் பாவிகள் பல்கி பெருகி கொண்டு இருக்கிறார்கள். பணத்தை நம் கட்டுப்பட்டிற்குள் வைத்துக்கொண்டால் அகிலமும் நம் கையில்தான். தாமரை இலை தண்ணீராய் இருந்தால் நாம் எந்த பணச் சுழலில் அகப்படாமல் தப்பலாம். நாம் சுவாசிக்கும் காற்றுக்கு அடுத்தபடியாக மக்கள் முக்கியமாக கருதுவது பணமே. பணம் இல்லாதவன் வாழ்கையின் சுகம் அறியான். பணமே வாழ்வின் ஆதாரம். பணத்தின் மதிப்பறிந்தால் பணம் உன்னை அறியும் பணத்தை தர்மம் செய்தால் பாவம் கரையும் என்று பலரும் நம்புகிறார்கள். பணம் பண்ண எந்த வரையரையும் இல்லை. அதற்கு வானமே எல்லை. போதும் என எவரும் சொல்ல துணிவதில்லை. அடுத்தவர் நம்மை விட அதிகமாக வைத்திருந்தால் அதையே ஊக்கமாகக் கொண்டு அதைவிட அதிகமாக பணம் ஈட்ட முனைவோம். வயிற்றுக்கும், வாழ்கைக்கும் அளவு வைத்த இறைவன் ஆசைக்கும் மட்டும் அளவு வைக்க மறந்தான். வாழ்வின் பெரும் பகுதி பொருள் சேர்க்கும் வேலையிலே உள்ளோம். பணத்தை அதிகம் சேமித்து, அளவோடு செலவு செய்து, வாழ்வில் இன்பம் காண இறைவன் அருள்புரிவானாக.

முயற்சி..முயற்சி..முயற்சி

தளர்ச்சி இல்லா முயற்சியே ஒரு பயிற்சி முயன்றால் முடியாதது இந்த உலகில் இல்லை. விடமுயற்சி வெற்றிக்கு வித்திடும். வாழ்வில் சுவை கூட்டுவது இந்த முயற்சிதான். வாழ்கை வாழ்வதும் ஒரு முயற்சிதான். பூமி சுழலுவதும் இந்த முயற்சியில்தான். தோல்விகளை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் வேண்டும். நம் செயலில் முயற்சியிருந்தால் தோல்விகள் நம்மை அண்டாது. முயற்சிக்கு உதாரண புருஷர்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளார்கள். அவரவர் செயலில் முயன்று வென்றதால்தான் அவர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள். எறும்பின் உழைப்பில் முயற்சி இருக்கிறது. ' தெய்வத்தால் ஆகதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலிதரும் ' வள்ளுவன் வாக்கு. குறளின் குரல். நம் திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும் வேண்டியதிற்கு மேலும் அள்ளித் தரும். முயற்சி இல்லாமல் தெரு கற்களாய் நின்று கொண்டு, விழலுக்கு இறைத்த நீராய் வேலை பார்த்துக் கொண்டு, ஆடைகடைகளில் அழகு மெழுகு பொம்மைகளாய் நின்று கொண்டு, உள்ளத்தை பூட்டி உடல் உழைக்காமல் உட்கார்ந்து உண்டு வாழ்பவர் எல்லாருக்கும் முயற்சி என்ற நான்கெழுத்து அவசியம் தேவை.
மக்களின் முயற்ச்சியே நாட்டின் வளர்ச்சி!
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் - பழமொழி.
முயற்சி உடையோர் புகழ்ச்சி அடைவர் - புதுமொழி.
தடை கற்களை படிகற்களாக மாற்றுவதும் இந்த முயற்சியே. வாய்ச் சொல்லாக முயற்சியை உச்சரிப்பதை விடுத்து. நம் செயலில் பிரதிபலிக்க வேண்டும். சுயமுயற்சி ஒருவரின் வெற்றிக்கும், கூட்டு முயற்சி அனைவரின் வெற்றிக்கும் வழிகோலும். முயற்சி இல்லாத ஒரு செயல் சிறகில்லாத பறவை உயர பறக்க நினைப்பதற்கு ஒப்பாகும். வாழ்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. முயற்சியுடன் நம்மை நமக்குள் தேடி நம் வாழ்வை வளமாக்குவோம்.

Tuesday, July 3, 2007

மலைகள்

இயற்கை கல் மேடு மலை. மேனியே பாறையாய் ஓங்கி வளர்ந்த மாளிகை. நம்மை மேல் நோக்க வைத்து மேலிருந்து பார்க்கும் அது. தலை தட்டும் மேகங்கள். வான் முட்டும் மரங்கள். குருதி போல் அருவி ஒழுகும் ஓடைகள். இயற்கை வடித்த சிலை இம்மி அளவும் நகருவதில்லை. தவமுனிகளை தன்னகத்தே இழுக்கும். மழை வர உழைக்கும். சுரண்டாமல் இருந்தால் பிழைக்கும். பறவை, விலங்கை அழைக்கும். இயற்கையில் அடையாளமாக அது நிலைக்கும். சிகரம் என்ற உயரம். அதுவே இயற்கை அன்னையின் உயிரும். மர மயிர் படர்ந்த மலைகள் செழுமை சேர்க்கும் நம் கண்களுக்கு. ஒரு மலையின் வேர் அந்த மண்ணுக்குதான் தெரியும். ஒவ்வொரு மலைக்கும் மக்கள் ஒரு கதை வைத்திருப்பார்கள். பெரும்மலை அருகே சிறு ஊர் இருந்தால் மரம் போல் நிழல் தருவது அந்த மலைதான். குடைக்கு விடை கிடைத்தது கண்ணனுக்கு ஒரு மலைவடிவில். கடவுள் பலரும் கால் நோகாமல் மலை உச்சியில் போய் உட்கார்ந்ததால் பல மலை பிழைத்தது கல்வெட்டிகளிடமிருந்து. இன்னும் பல நினைவுச் சின்னங்களாக மின்னுகின்றன. மலைகளின் பாறைகள் இயற்கை செதுக்கிய சிற்பங்கள். காற்று, மழை, வெய்யில் அதை செதுக்கும் சிற்பிகள். கடுங்குளிர், கொடும் பனி, சுட்டெரிக்கும் வெய்யில் என எதையும் தாங்கும் இதயங்களை பிரதிபலிக்கின்றன. எல்லா மலைகளுக்கு அடியிலும் என்ன புதையல் வைத்தான் இறைவன் என்று தள்ளி பார்க்க யார்க்கும் திரணி இல்லை. துணிவும் இல்லை. மலையின் பிரம்மாண்டம் பிரம்மிப்பூட்டும் பார்த்தவரை. இயற்கை மலைக்கு இணையாக யாரும் செயற்கை கற்குவியல் செய்ததில்லை. அப்படியே செய்தாலும் இயற்கையின் நிலையில் இல்லை. மலயேற்றமே அலாதியான விளையாட்டு. அதனோடு ஒட்டி, உரசி, பழகி, உச்சி சென்று, உலகை பார்ப்பது பலருக்கும் வியப்பான் ஆனந்தம். மலையின் மீது ஏறுவதால் சிறந்த எண்ணங்கள் உருவாகும். அதுவே பல படைப்பாளிகளை உருவாக்கும். முகிலினங்கள் மலைகளில் முட்டி வலிதாங்காமல் இடி ஓசை எழுப்பி சிந்தும் கண்ணீர்தான் மழை தூரல்களா? மலை உச்சி சென்று நின்று பார்த்தால் பெரிய பரந்து விரிந்த ஊர் சிதறிய கண்ணாடி சில்லுகளாய் பகலவன் ஒளியில் மின்னும் மனித நடமாட்டமும் அவர்கள் வாகனமும் சிறு, பெரு எறும்புகளாய் ஊர்ந்து செல்லும் அழகே அலாதியானது. மலை உச்சியில் அடிக்கும் பலமான காற்றுதான் மலையைக் கரைக்கிறதா? என்ற கேள்வி எழும். இத்தனை தடையையும் மீறி எப்படி மலை வளர்ந்தது என்பது ஆச்சிரியமான அதிசயம். அதை பார்த்தால் வாழ்வின் ருசியும் வாழவேண்டும் என்ற பசியும் அதிகரிக்கிறது. மலையை போல பெரிய மனமும், குணமும், எண்ணமும் நம்மிடமிருந்தால் வாழ்வில் வெற்றி தின்னம். அவ்வாறே நமக்கு கிட்ட இறைவன் அருள் புரியட்டும்.

Free Blog Content